Tuesday, June 20, 2006

தூங்கா விழிகள், தொண தொணக்கும் நினைவுகள்

சஞ்சலமில்லா தனிமை கேட்டேன்.
என்னை கட்டி அணைத்து
அருகில் அமர்ந்தாய்.

தூக்கமில்லா கனவுகள் கேட்டேன்.
என்னை தவிக்க விட்டு
எங்கே சென்றாய்?

வழிகாட்டி

மொழி மறந்து
கண்கள் அயர்ந்து
காற்றில் ஆடும் பிம்பமாய்
துருப்பிடித்து நான் ஆட
என்னிடம் ஏன் தேடுகிறாய்
போகாத ஊருக்கு வழி?

ராட்டினம்

வனிதாவும், கவிதாவும்
மெல்ல மறைய;
கமலின் கைதட்டலில்
பாபுனியும் சிரிக்க;
விரல் இடுக்கின்
சிறு ஓட்டையில்,
அப்பாவின் தலை
தூரத்து புள்ளியாக;
காற்றை கிழித்து
உயரே பறந்தோம்,
வானத்தை தொட.

நாளை பிடிப்போம்
என ஏமாற்றி
கீழே இழுத்தாள்
ஆசை அம்மா.

அழுக்கு லுங்கியும்,
முறுக்கேரிய கைகளும்,
கறைப்படிந்த சட்டைப்பையில்
கிழிந்த நோட்டுக்களுடன்
காணாமல் போனான்
அந்த வித்தைக்காரன்.

உங்கள் தெருவில்
அவனை பார்த்தால்,
என் வீட்டுக்கு
மறக்காமல் அனுப்புங்கள்.
ஆசையொடு காத்திருக்கிறேன்
வானத்தின் மேல்
தீரா காதலுடன்.

-- இந்த படத்தை பார்த்ததும் எழுதியது.

அப்போ எனக்கு நாலு வயசு. திருநெல்வேலியில் ஆச்சியிடம் வளர்ந்திட்டு இருந்த என்னை வலுக்கட்டாயம மெட்ராஸ் கூட்டிட்டு வந்து ரெண்டு வருஷம் ஓடிருச்சு. என்னை பார்த்துக்க என்னோட சித்தியும் வந்தாங்க. ஊர விட்டு வந்ததுல இருந்து நான் பண்ண அழிச்சாட்டியம் ரெம்பவே டூ மச்!

அன்னிக்கு அப்படி தான், தெருவுக்கு வந்த ராட்டினத்துல ஏறனும்னு ஒரே அடம். அப்பாவும், சித்தியும் ஏத்தி விட்டாங்க. ரெண்டாவது நிமிஷம் பயங்கர அழுகை, "என்னை இறக்கி விடு"னு. எங்க அப்பாவுக்கு நான் பண்ண கூத்துல என்னைக்கும் வராத கோபம் அன்னிக்கு வந்துச்சு. ராட்டினமும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்னு வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டங்க. நாம தான் விடா கொண்டன் பரம்பரை ஆச்சே, வீட்டுல உள்ள எல்லத்தையும் போட்டு உடைக்க ஆரம்பிச்சேன்.

இந்த கூத்து நடக்கவும், அம்மா Officeல இருந்து வரவும் சரியா இருந்தது. அப்புறம், அம்மா சமாதானப்படுத்தி ஒரு வழியா நானும் அந்த ராட்டினத்துல ரெண்டு தடவை சுத்திட்டேன். கமல், பாப்புனி ரெண்டு பேரும் பக்கத்து வீட்டுல இருந்தாங்க.வனிதா, கவிதா எதிர் வீடு.இது நடந்தது முத்தையால் செட்டி தெரு, புரசைவாக்கம்.

மனதோடு ஒரு மழை காலம்

விடிந்தும் விடியாத
அந்த மஞ்சள் ஒளியில்,
விழிப்புக்கும் துயிலுக்கும்
இடையில் உள்ள அரைமயக்கத்தில்,
வருடிடும் உன் ஒற்றை நினைவு -
மனதோடு ஒரு மழை காலம்!




-- இந்த கவிதை எழுதியது, ஷாம் நடித்து வெளிவரும் பட டைட்டில் (மனதோடு மழை காலம்) கேட்டவுடன்.

முதல் மரியாதை

நான் முதன் முதலில் தமிழில் எழுத ஆரம்பித்தது என் மூணாவது வயதில். நாங்க இருந்த வீட்டில், எங்களை போல் இன்னும் 6 ஒன்டி குடுத்தனங்கள். கீழ் வீட்டில் உள்ள வித்யா பெரியம்மா வாங்கும் தினத்தந்தி பேப்பரில் எனக்கு தெரிஞ்ச "ஏய்ஃஅகபே" கிருக்கி, அதுக்கும் ஒரு அர்த்தம் கற்பிச்சு பெரிய மனுஷி மாதிரி எல்லாரையும் ஒரு பெருமிதப் பார்வை பார்த்தது இன்னும் நினைவிருக்கிறது.

கிறிஸ்த்துவ பள்ளியில் படிச்சதுனாலயோ என்னவோ யோசிப்பதுகூட ஆங்கிலத்தில் தான். ஏதோ அந்த தாமிரபரணி கரையோரம் பிறந்த புண்ணியம், 24 வருஷம் மெட்ராஸ்ல குப்ப கொட்டியும் நல்ல தமிழ் மறக்கல.

பள்ளி படிப்பு முடிஞ்சு,10 வருஷம் கழிச்சு திரும்பவும் தமிழில் எழுத ஆரம்பிக்கறேன்.

எத்தனை குரைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவன் நீ குரு பொருப்பது உன் கடன்

என்று எல்லாம் வல்ல அந்த முருகன் மேல் பாரத்தை போட்டிட்டு ஆரம்பிக்கறேன்.