Tuesday, October 03, 2006

நினைக்க மறந்த கவிதை

"விடுதலை என்றால்...? வாக்கியத்தை முடிக்காமல் எங்களை பார்த்தார் ராமு சார். ராமு சார் எங்கள் பள்ளியின் கண்டிப்பான கணக்கு வாத்தியார். ஆனால் கணக்கு மட்டும் இல்லாமல் சில நேரம் பாரதியார் கவிதையும் சொல்லிக் கொடுப்பார். எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர். இன்று கணக்கு பாடம் நடத்த போவதில்லை என்று தெரிந்ததும் அனைவரும் பதிலளிக்க முந்தினர்.

"நினைச்ச நேரத்துக்கு மைசூர்பா சாப்பிடறது, சார்!" என்றான் ரங்கன்.
"டேய் நீ இப்பவே ரெண்டு கிலோ மைசூர்பா தினமும் சாப்பிடறவன் மாதிரி தான் இருக்க" என்று கிருபா சொல்ல, அங்கே ஒரு சிரிப்பலை எழுந்து அடங்கியது.

"விரும்பற இடத்துக்கு போறது."
"அம்மா அப்பா அறிவுரை இல்லாம இருப்பது."
"வீட்டுப்பாடம் இல்லாத பள்ளிக்கூடம்."
ஒவ்வொருவரின் சின்ன சின்ன ஆசைகளும் ஒரு வடிகால் கிடைத்த சந்தோஷத்தில், கூச்சமில்லாமல் மேடையேறின.

"காலில் செருப்பில்லாமல் புல்வெளியில் ஓடுவேன்" என்றேன்.வகுப்பில் அனைவரது கவனமும் என் மேல் திரும்பியது. என் மனமோ ஜன்னல் கம்பிகளை உடைத்து வெளியே பறந்தது.

"அதோ அந்த பனை மரத்தின் உச்சியில் ஏறி வானத்தை தொட முடியுதானு பார்ப்பேன். நம்ம ஊர் ஆத்தங்கரை மணலில் என் கால் தடம் பதிய நடப்பேன். நம்ம ஸ்கூல் ஓட்டப்பந்தயத்தில் கலந்து முதல் பரிசு வாங்குவேன்."

நான் பேச பேச வகுப்பில் நிசப்தம் ஒரு கனமான போர்வை போல் எங்களை போர்த்தியது. "எலந்தபழ காட்டில், நானும் சேதுவும் போட்டி போட்டு பழம் பறிப்போம். அம்மாவோட வெள்ளி கொலுசை மாட்டி, ஜல் ஜல்னு சத்தம் கேட்க, எங்க வீட்டு திண்ணையில் ஆடுவேன்."

"புளிய மரம் ஏறி, கொடுக்காப்புளி பறிச்சு, தோட்டக்காரன் பிடிக்கறதுக்கு முன்னாடி தப்பிச்சு ஓடுவேன். சின்ன பாவாடை உடுத்தி அப்பா கைப்பிடிச்சு பொருட்காட்சி போவேன். ராட்டினத்தில் ஏறி, கீழே நிற்கும் அம்மாவுக்கு டாடா காட்டுவேன். தேரோட்டத்துக்கு பட்டு பாவாடை உடுத்தி, கால் கடுக்க நின்னு நெல்லையப்பரை தரிசிப்பேன். பை நிறைய கத்திரிக்காய் மிட்டாயும், அப்பளப்பூவும் வாங்கி, வீட்டு திண்ணையில் உட்கார்ந்து, நானும் எங்க வளவு பிள்ளைகளும் கதை பேசுவோம்."

கண்ணீர் சேர, ஒரு நிமிடம் கண்மூடி அமர்ந்தேன். யாரும் பேசவில்லை. ஸ்கூல் மணி ஒலிக்க, அந்த மௌனம் கலைந்து, எல்லோரும் வீட்டுக்கு கிளம்பினார்கள். ராமு சார் மட்டும் என்னை யோசனையோடு பார்த்தார்.

"விடுதலைக்கு நிறைய பரிமாணங்கள் இருக்கலாம் சார். உடலளவில் எந்த வித குறையும் இல்லாத இவர்கள், தன்னையும் அறியாம தங்களை சுற்றி கண்ணுக்கு புலப்படாத ஒரு சிறை அமைச்சு, அதுல இருந்து விடுபட தவிக்கறாங்க. அவங்க செய்ய வேண்டியதெல்லாம், அவர்களை அழுத்தும் அந்த அபிப்பிராயங்களை வெட்ட வேண்டியது மட்டும் தான்."

"என்னை பொறுத்தவரை, சுதந்திரம் ஒரு கவிதை, கற்பனை சிறகுகள் உள்ள ஒவ்வொருத்தரும் படைக்கக்கூடிய கவிதை. என்ன, என் விஷயத்துல கொஞ்சம் எழுத்து பிழை அதிகம். அவ்வளவுதான்." என்று கூறி புன்னகைத்தேன். மெல்ல அவர் முகத்திலும் என் புன்னகை எதிரொலித்தது. எனது சக்கர நாற்காலியை அவர் தள்ள, இருவரும் அந்தி மாலை கதிரவனை கொண்டாட சென்றோம்.