Friday, September 15, 2006

எங்க வீட்டு ராமாயணம்

முன் குறிப்பு: தேன்கூடு இந்த மாத போட்டிக்கு...

வீட்டுக்கு வந்த உடனே முதல் வேளையா சைக்கிள் எடுத்துட்டு சுத்த போனேன். நேற்று எட்டாவது பிறந்த நாளுக்கு அப்பாவும், அம்மாவும் கொடுத்தப் பரிசு.

"பார்த்து கீர்த்தனா, இருட்றதுக்கு முன்னாடி வந்திடனும், சரியா?" இது அம்மா.
"சைக்கிள் பத்திரம். உடைச்சிராதே," இது அப்பா. நானும் என் பங்குக்கு தலையாட்டிட்டு ஒடினேன். எங்க தெருவை ரெண்டு தடவை சுத்தி வந்தும் யாரும் வெளியே வரவேயில்லை. சுத்தும் முத்தும் பார்த்து, யாரும் இல்லைனு தெரிஞ்சதும், மெதுவா சைக்கிளை பக்கத்து தெருவுக்கு ஓட்டினேன்.

அங்க சில பிள்ளைங்க பாண்டி விளையாடிட்டு இருந்தாங்க. அவங்க முன்னாடி கொஞ்சம் பந்தாவா ஓட்டிட்டு போனேன். ஐந்து நிமிஷம் கழிச்சு சுத்தி பார்த்தா, எல்லா தெருவும் ஒரே மாதிரி தெரிஞ்சது. எங்க திரும்பனும்னு தெரியலை. அம்மாவ நினைச்சுக்கிட்டு இடது பக்கம் இருந்த தெருக்குள்ள திரும்பினேன்.

என் கண்ணை என்னாலையே நம்ப முடியலை. அந்த தெருவில, வீடே இல்லை. சுத்தி ஒரே மரமும், செடியும் தான். ஐய்யோ! தொலைஞ்சுட்டோம் போலனு திரும்பினா, வந்த வழியையும் காணோம். எனக்கு அழுகை அழுகையா வந்தது. பேசாம அப்பவே வீட்டுக்கு போயிருந்தா, இப்போ பஜ்ஜி சாப்பிட்டுட்டே டிவி பார்த்திருக்கலாம்னு தோணுச்சு.

என்ன செய்யனு தெரியாம நான் முழிச்சிட்டிருந்த சமயம், ஒரு சுண்டெலி என் கால் பக்கத்துல ஓடிச்சு. "அம்மா"னு ஒரு காட்டு கத்தலோடு நான் சைக்கிளை கிழே போட்டுட்டு குதிச்சேன். அந்த சுண்டெலி கருப்பு பேண்டும், நீல கலர் குர்தாவும் போட்டிருந்தது. "பயமுரித்திட்டேனா? மன்னிச்சிக்கோங்க. நான் பயங்கர அவசரத்துல இருக்கேன்,"னு சொல்லுச்சு.

ஒரு நிமிஷம் கண் கொட்டாம அந்த சுண்டெலியை பார்த்தேன்.
"ஐய்! நீங்க பேசுவீங்களா?"னு கேட்டேன். சுண்டெலி என்னை விசித்தரமா ஒரு லுக் விட்டது.
"ஆமாம். ஏன்? உங்க ஊர்ல யாரும் பேசிக்க மாட்டீங்களா?" என்று கேட்டுச்சு.
"ஓ பேசுவோமே! ஆனா மிருகங்க கிட்ட பேச மாட்டோம்"
"சரி சரி. என் பேரு மேரி. இன்னைக்கு ராமு கல்யாணம், அதுக்கு தான் இவ்ளோ அவசரமா ஓடிட்டு இருக்கேன். அப்புறம் பேசலாம், சரியா?"
னு சொல்லிட்டு விருவிருனு நடக்க ஆரம்பிச்சது. கொஞ்ச தூரம் போனதும், திரும்பி என்னை பார்த்து,
"பேசாம நீயும் வாயேன். ராமு வீட்டு கல்யாண சாப்பாடு எட்டு காட்டுக்கு மணக்கும். நானும் சைக்கிள்ள போய் இறங்கினா சும்மா கெத்தா இருக்கும்,"னு சொல்லிச்சு.

"சரி. ஏறுங்க. என் பேரு கீர்த்தனா. எப்படி போணும்னு வழி சொல்லுங்க"னு சொன்னேன். லிஃப்டு கிடைச்ச சந்தோஷத்துல மேரி, பாடிக்கிட்டே வந்தா. கொஞ்ச தூரம் போனதும், பின்னால யாரோ வேகமா ஓடி வர சத்தம் கேட்டது.
"நிறுத்துங்க!நிறுத்துங்க!"னு யாரோ எங்களை கூப்பிட்டாங்க. திரும்பி பார்த்தா, ஒரு முயல், வேஷ்டியை ஒரு கையிலயும், துண்டை இன்னொரு கையிலயும் புடிச்சிட்டு மூச்சிரைக்க ஓடி வந்தது.
"என்ன ஐயரே! நீங்களும் லேட்டா?"னு நக்கலா மேரி விசாரிச்சா.
"கிண்டல் பண்ண நேரமில்லை. எனக்கும் கொஞ்சம் லிஃப்டு கிடைக்குமா?"னு சீனிவாசன் என்ற அந்த முயல் கேட்டுச்சு.

மேரி என்னோட சைக்கிள் முன்னாடி இருந்த கூடைக்கு இடம் மாற, சீனிவாசன் பின் சீட்டில் உட்கார்ந்தார். எங்கள் பயணம் மேரியோட பாட்டோடு தொடங்கியது.
"இன்னும் எவ்வளவு தூரம் போகணும் மேரி?"
"பக்கத்துல வந்துட்டோம். கவலை படாதே. அதோ அந்த குளத்தை தாண்டினதும், கல்யாண வீடு தான்," என்றாள்.
"இல்லை, வீட்டில தேடுவாங்க, அதான் கேட்டேன்."
"ஒன்னும் பயப்படாதே."னு அமைதிப்படுத்தினாள்.

அந்த குளத்தை நெருங்கும் போது தான் அவர்களை பார்த்தேன். ரெண்டு தவக்களை ஒரு ஆமை மீது உட்கார்ந்து வந்து கொண்டிருந்தன. கூடவே ஒரு நண்டும்,ஒரு வாத்தும் கையில் ஆளுக்கொரு பையுடன் நடந்து வந்தன. எல்லோரும் பட்டு ஜிப்பா, பட்டு வேஷ்டியில் ஜொலித்தனர்.
"அட! நம்ம கச்சேரி கோஷ்டி. கீர்த்தனா, இது தான் கணேஷ், வஸ்ந்த்; இந்த ஜில்லாவிலேயே மிகப் பெரிய பாடகர்கள்,"னு அறிமுகப்படுத்தினாள்.

ரெண்டு தவக்களையும், அவங்களோட பச்சை பட்டு ஜிப்பா காலரை தூக்கி விட்டு கொண்டனர்.
"அப்புறம் நம்ம சாமி(ஆமை) தான் தம்புரா, விட்டல்(நண்டு) மிருதங்கம், ராகவன்(வாத்து) நாதஸ். வாங்க,வாங்க நாமளும் வண்டியிலேயே போயிரலாம்"னு என்னமோ அம்பாஸிடர் கார்ல ஏத்திர மாதிரி எல்லோரையும் ஏத்தினா.

எனக்கு கை லேசா நடுங்க அரம்பிச்சுது. ரெண்டு நிமிஷம் நல்லா மூச்சு இழுத்து விட்டிட்டு, நானும் சைக்கிளை அழுத்த அரம்பித்தேன். தூரத்துல பயங்கர உருமல் சத்தம் கேட்டுச்சு.
"தலைவர் வந்துட்டார் போல"னு ராகவன் சொன்னான். அப்பாடா, இன்னும் கொஞ்ச தூரம் தான், எப்படியாவது தம் பிடிச்சு அழுத்த வேண்டியதுதான் என்ற முடிவோடு நானும் அவங்க பாட்டுல கலந்துக்கிட்டேன்.

திடீர்னு காடே அதிர்ந்தது. நில நடுக்கமோனு பயந்து நான் சைக்கிளை நிறுத்தினேன். புழுதி பறக்க ஒரு காட்டு யானை எங்களை நோக்கி ஓடி வந்தது. எங்களை பார்த்ததும் ஒரு நிம்மதி பெருமூச்சோடு நின்றது. எல்லோரும் வாயடைச்சு அந்த யானையை பார்க்க, கொஞ்ச நேரம் அங்கே ஒரு நிசப்தம் நிலவியது.

அப்புறம் ஏதோ ஜோக் சொன்ன மாதிரி எல்லோரும் சிரிக்க ஆரம்பிச்சாங்க. மேரி தான் சிரிப்பை அடக்கி, அந்த யானையை பார்த்து கேட்டாள்,
"அடப்பாவி, உன்னோட கல்யாணதுக்குமாடா லேட்டா வருவ?" மாப்பிள்ளை ராமு வெட்கப்பட்டு சிரிக்க, அங்கே திரும்பவும் சிரிப்பு சத்தம் கேட்டது.
"சரி சரி, சிரிச்சது போதும். கீர்த்தனா, நீ நிறையவே உதவி செஞ்சிருக்க, அப்படியே ராமுவுக்கும் லிஃப்டு கொடுக்க முடியுமா?"னு சீனிவாசன் கெஞ்சினார்.

எல்லோரது கவனமும் என் மேல, எனக்கோ என் கண் முன்னாடி எங்கப்பா பெருசா தெரிஞ்சாங்க. தாத்தா சொன்ன மாதிரி, பிள்ளையார் மேல பாரத்தைப் போட்டு தலையாட்டினேன். ராமு என்னை கட்டிப் பிடித்து தன் நன்றியை சொன்னான். யார் எங்கே உட்கார வேண்டும்னு ஒரு சின்ன அலோசனை நடந்தது. அதன்படி, ராமு பின் சீட்டில் அமர, அவன் முதுகில் சீனிவாசன் உட்கார, சீனிவாசன் முதுகில் மேரி உட்கார்ந்தாள். கச்சேரி கோஷ்டி முன் கூடையில் உட்கார்ந்தாங்க.

நான் கண்ணை மூடி ஏறி உட்கார்ந்து அழுத்தினேன். கல்யாண வீடு நெருங்க நெருங்க, சைக்கிள் ரொம்பவே மெதுவா நகர்ந்தது. வீட்டு வாசல் வரவும், பின் டயர் வெடிக்கவும் சரியா இருந்தது. அப்புறம் எப்படியோ சமாளிச்சு, ராமு, சீதா கல்யாணம் நல்ல படியா நடந்தது.

"அப்படி தான்பா இந்த சைக்கிள் உடைஞ்சுது. பாவம் பா ராமு, அவன் லிஃப்டு கேட்கும் போது நான் எப்படி மாட்டேன்னு சொல்ல முடியும், சொல்லுங்க?" என்று அப்பாவியாய் கேட்ட தன் செல்ல மகளை பாராட்டுவதா, இல்லை கடிந்து கொள்வதா என்று தெரியாமல் தன் மனைவியை பார்த்தார் முத்து.****

6 Comments:

Anonymous Kavitha said...

keerthana yeppadi vetuku vanda avalukuthan vali theriyathe?mathapadi kathai fulla reeel.

9:19 AM  
Anonymous amma said...

keerthana ramuvai cyclil kootipovathi ninaithal [namma keertana] chiruuputhan varukirathu.

9:22 AM  
Anonymous சரவ் said...

கடைசீல எதோ மனித மதங்களைப் பத்தி பஞ்ச் கருத்து சொல்லப்போறீங்க நெனைச்சேன். அப்டி இல்லாம சிம்பிளா முடிச்சிருந்தாலும் நல்ல கதை.

6:57 PM  
Anonymous Anonymous said...

உங்கள் படைப்பை வாசித்ததில் எனக்குப் பிடித்தது...

6:26 PM  
Blogger Kumari said...

@அம்மா: :)
@கவி: ரீலோ, உண்மையோ, உனக்கு பிடிச்சதாங்கறது தான் கேள்வி :p

@சரவ்: நன்றி :) பஞ்ச் டயாலாக் சொல்ற அளவுக்கு நான் இன்னும் வரலைங்க :D

@முரட்டுக்காளை: ரொம்ப நன்றி :)

3:34 PM  
Blogger த.அகிலன் said...

ம் வலைப்பூவுக்கு வந்திருந்தீங்க நானும் வந்து பார்த்தன் சூப்பரா எழுதியிருக்கிறீங்க வித்தியாசமான முயற்சிகள்வித்தியாசமான உலகுக்கு கூட்டிச் செல்கிறது உங்கள் படைப்புக்கள் சும்மா சொல்லவில்லை உண்மையாகவே தரம் நான் போட்டியியில் நீங்கள் வெற்றிபெற வாழ்த்த மாட்டேன் ஏனென்றால் உங்களைப்போல பெரிய மனசு எனக்கு இல்லை
அன்புடன்
த.அகிலன்

8:14 AM  

Post a Comment

<< Home