Friday, July 17, 2009

ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி ...

தட தட ...தட தட
நெல்லை எக்ஸ்பிரஸ் காற்றையும் விட வேகமாக தண்டவாளத்தில் விரைந்து ஓடியது. ஜன்னல் கம்பிகளின் இடுக்கில் தெரிந்த பச்சை வயலை சுற்றி வளைக்க இரண்டு பிஞ்சு கைகள் விரைந்தன.
"தேவி! கையை உள்ளை வை. இல்லேன்னா , எலெக்ட்ரிக் கம்பி-ல அடிபட்றும்."
சிணுங்கி கொண்டே அவள் கையை உள்ளே இழுக்க,
" அதுக்கெல்லாம் என்னை மாதிரி சூர புலியா இருக்கணும்la" nu காலரை தூக்கி விட்டான் அவள் அண்ணன் ரமேஷ்.
"ஏல ரமேஷு உனக்கு தனிய sollanumaala? ஸ்டேஷன் வரை வரைக்கும் ரெண்டு பேரும் சும்மா இருக்க மாட்டீங்களா?

வாஞ்சி மணியாச்சி.
"அம்மா திருநெல்வேலியா இது?"
"இல்லை மணியாச்சி"
"அச்சோ! அப்போ பெட்டி எடுங்க, அண்ணா வா இறங்கணும்"
"இல்லை தேவி. மணியாச்சி ஊரு. ஜங்ஷன் வரதுக்கு இன்னும் நேரம் இருக்கு. அடுத்து நாரை கிணறு, அப்புறம் தாழையத்து , அப்புறம்.."
"போங்கப்பா , நாரை கிணருனு ஊரெல்லாம் இல்லை. அது பெரிய பொய்"
"இதோ பாருடி இந்த குட்டிய . வருஷா வருஷம் தாத்தா வீட்டுக்கு வரா, ஆனா ஜங்ஷன் எப்போ வரும்னு தெரியலை. உங்க வீட்டுல சூப்பர் வளர்ப்பு தான் போ!"
"அது சரி இப்போ மட்டும் எங்க வீடு உங்க கண்ணுக்கு தெரியுமே. லீவுல இருபது நாள் உங்க வீட்ல இருக்கும் போது சொல்லி குடுக்க வேண்டியது தானே ?"

"இஞ்சி மொரப்பா! கடல மிட்டாய்! எள் மிட்டாய்! அஞ்சு ரூவாய்க்கு மூணு!"
"காபி காபி ! இட்லி வடை போளி! சார் இன்னிக்கு காலைல போட்டது !

கேலிகளும் விற்பனை கூவல்களும் மாறி மாறி எதிரொலிக்க, வண்டி சக்கிரம் நெல்லை ஜங்ஷன் இல் நின்றது.

தூரத்தில், கூட்டத்தில் ஒரு வெள்ளை வேஷ்டி வெள்ளை sattai தெரிந்தது .
"அப்பா! இங்க இருக்கோம்"
"தாத்தா! தாத்தா! இந்த தடவை எனக்கு மட்டும் கதை சொல்லுங்க . நான் தான் first ரேங்க் எடுப்பேன். ரமேஷ் கிளாஸ்-ல டென்த் ரேங்க் தான். அப்புறம் எனக்கு தேன் மிட்டாய் வேணும்...

"வாம்மா! வாங்க மாப்பிள்ளை ! ரொம்ப எளச்சிட்டீங்க. வேலை அதிகமோ?
"எங்க மாமா.... உங்க பொண்ணு கல்யாணத்துல சட்ரசம் பரிமாரினதொட சரி. வீட்ல சமையலையும் பார்த்துட்டு, ஆபீஸ்க்கும் போயிட்டு வந்தே நான் பாதி துரும்பா ஏலசிட்டேன்."
"ஏம்பா அவங்களும் சொல்ரங்கனு கேட்டுட்டு இருக்கீங்களே! வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?"

ஆட்டோ மேம்பாலத்தை தாண்டி சென்ட்ரல் டாக்கீஸ் வரவும், ரமேஷ் கத்தவும் சரியாக இருந்தது.
"தாத்தா நொங்கு ! நொங்கு! அதோ நிக்கறான் வண்டிக்காரன்."
"டேய் ஆட்டோ-வை நிருதெல்லாம் முடியாது. நீ போப்பா.!"
"அப்போ கதை சொல்லுங்க"

தாத்தா தொண்டை செருமினார்,
"ஒரு காட்டுல ஒரு நரி.
தேவி அம்மா மடியில் இருந்து தலை வளைத்து தாத்தா வை பார்த்தாள்.அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவல் அவளது சின்ன முகத்தில் .
"ஒரு காட்டுல ஒரு நரி.
அதோட கதை சரி."

"அய்யோ இது நல்லாவே இல்லை. போங்க தாத்தா!"
"சரி தாத்தா வீட்டுக்கு போய் கதை சொல்லுவாங்க. அதோ சந்தி பிள்ளையார் கோயில் வந்திருச்சு.அடுத்து என்னது..? " அப்பா கேட்க,
"தாத்தா வீடு வந்தாச்சு! ஆச்சி நாங்க வந்துட்டோம்!"

தட தட...தட தட ..
திண்ணை எங்கும் காலடி மொட்டுக்கள் ...

Tuesday, October 03, 2006

நினைக்க மறந்த கவிதை

"விடுதலை என்றால்...? வாக்கியத்தை முடிக்காமல் எங்களை பார்த்தார் ராமு சார். ராமு சார் எங்கள் பள்ளியின் கண்டிப்பான கணக்கு வாத்தியார். ஆனால் கணக்கு மட்டும் இல்லாமல் சில நேரம் பாரதியார் கவிதையும் சொல்லிக் கொடுப்பார். எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர். இன்று கணக்கு பாடம் நடத்த போவதில்லை என்று தெரிந்ததும் அனைவரும் பதிலளிக்க முந்தினர்.

"நினைச்ச நேரத்துக்கு மைசூர்பா சாப்பிடறது, சார்!" என்றான் ரங்கன்.
"டேய் நீ இப்பவே ரெண்டு கிலோ மைசூர்பா தினமும் சாப்பிடறவன் மாதிரி தான் இருக்க" என்று கிருபா சொல்ல, அங்கே ஒரு சிரிப்பலை எழுந்து அடங்கியது.

"விரும்பற இடத்துக்கு போறது."
"அம்மா அப்பா அறிவுரை இல்லாம இருப்பது."
"வீட்டுப்பாடம் இல்லாத பள்ளிக்கூடம்."
ஒவ்வொருவரின் சின்ன சின்ன ஆசைகளும் ஒரு வடிகால் கிடைத்த சந்தோஷத்தில், கூச்சமில்லாமல் மேடையேறின.

"காலில் செருப்பில்லாமல் புல்வெளியில் ஓடுவேன்" என்றேன்.வகுப்பில் அனைவரது கவனமும் என் மேல் திரும்பியது. என் மனமோ ஜன்னல் கம்பிகளை உடைத்து வெளியே பறந்தது.

"அதோ அந்த பனை மரத்தின் உச்சியில் ஏறி வானத்தை தொட முடியுதானு பார்ப்பேன். நம்ம ஊர் ஆத்தங்கரை மணலில் என் கால் தடம் பதிய நடப்பேன். நம்ம ஸ்கூல் ஓட்டப்பந்தயத்தில் கலந்து முதல் பரிசு வாங்குவேன்."

நான் பேச பேச வகுப்பில் நிசப்தம் ஒரு கனமான போர்வை போல் எங்களை போர்த்தியது. "எலந்தபழ காட்டில், நானும் சேதுவும் போட்டி போட்டு பழம் பறிப்போம். அம்மாவோட வெள்ளி கொலுசை மாட்டி, ஜல் ஜல்னு சத்தம் கேட்க, எங்க வீட்டு திண்ணையில் ஆடுவேன்."

"புளிய மரம் ஏறி, கொடுக்காப்புளி பறிச்சு, தோட்டக்காரன் பிடிக்கறதுக்கு முன்னாடி தப்பிச்சு ஓடுவேன். சின்ன பாவாடை உடுத்தி அப்பா கைப்பிடிச்சு பொருட்காட்சி போவேன். ராட்டினத்தில் ஏறி, கீழே நிற்கும் அம்மாவுக்கு டாடா காட்டுவேன். தேரோட்டத்துக்கு பட்டு பாவாடை உடுத்தி, கால் கடுக்க நின்னு நெல்லையப்பரை தரிசிப்பேன். பை நிறைய கத்திரிக்காய் மிட்டாயும், அப்பளப்பூவும் வாங்கி, வீட்டு திண்ணையில் உட்கார்ந்து, நானும் எங்க வளவு பிள்ளைகளும் கதை பேசுவோம்."

கண்ணீர் சேர, ஒரு நிமிடம் கண்மூடி அமர்ந்தேன். யாரும் பேசவில்லை. ஸ்கூல் மணி ஒலிக்க, அந்த மௌனம் கலைந்து, எல்லோரும் வீட்டுக்கு கிளம்பினார்கள். ராமு சார் மட்டும் என்னை யோசனையோடு பார்த்தார்.

"விடுதலைக்கு நிறைய பரிமாணங்கள் இருக்கலாம் சார். உடலளவில் எந்த வித குறையும் இல்லாத இவர்கள், தன்னையும் அறியாம தங்களை சுற்றி கண்ணுக்கு புலப்படாத ஒரு சிறை அமைச்சு, அதுல இருந்து விடுபட தவிக்கறாங்க. அவங்க செய்ய வேண்டியதெல்லாம், அவர்களை அழுத்தும் அந்த அபிப்பிராயங்களை வெட்ட வேண்டியது மட்டும் தான்."

"என்னை பொறுத்தவரை, சுதந்திரம் ஒரு கவிதை, கற்பனை சிறகுகள் உள்ள ஒவ்வொருத்தரும் படைக்கக்கூடிய கவிதை. என்ன, என் விஷயத்துல கொஞ்சம் எழுத்து பிழை அதிகம். அவ்வளவுதான்." என்று கூறி புன்னகைத்தேன். மெல்ல அவர் முகத்திலும் என் புன்னகை எதிரொலித்தது. எனது சக்கர நாற்காலியை அவர் தள்ள, இருவரும் அந்தி மாலை கதிரவனை கொண்டாட சென்றோம்.

Friday, September 15, 2006

எங்க வீட்டு ராமாயணம்

முன் குறிப்பு: தேன்கூடு இந்த மாத போட்டிக்கு...

வீட்டுக்கு வந்த உடனே முதல் வேளையா சைக்கிள் எடுத்துட்டு சுத்த போனேன். நேற்று எட்டாவது பிறந்த நாளுக்கு அப்பாவும், அம்மாவும் கொடுத்தப் பரிசு.

"பார்த்து கீர்த்தனா, இருட்றதுக்கு முன்னாடி வந்திடனும், சரியா?" இது அம்மா.
"சைக்கிள் பத்திரம். உடைச்சிராதே," இது அப்பா. நானும் என் பங்குக்கு தலையாட்டிட்டு ஒடினேன். எங்க தெருவை ரெண்டு தடவை சுத்தி வந்தும் யாரும் வெளியே வரவேயில்லை. சுத்தும் முத்தும் பார்த்து, யாரும் இல்லைனு தெரிஞ்சதும், மெதுவா சைக்கிளை பக்கத்து தெருவுக்கு ஓட்டினேன்.

அங்க சில பிள்ளைங்க பாண்டி விளையாடிட்டு இருந்தாங்க. அவங்க முன்னாடி கொஞ்சம் பந்தாவா ஓட்டிட்டு போனேன். ஐந்து நிமிஷம் கழிச்சு சுத்தி பார்த்தா, எல்லா தெருவும் ஒரே மாதிரி தெரிஞ்சது. எங்க திரும்பனும்னு தெரியலை. அம்மாவ நினைச்சுக்கிட்டு இடது பக்கம் இருந்த தெருக்குள்ள திரும்பினேன்.

என் கண்ணை என்னாலையே நம்ப முடியலை. அந்த தெருவில, வீடே இல்லை. சுத்தி ஒரே மரமும், செடியும் தான். ஐய்யோ! தொலைஞ்சுட்டோம் போலனு திரும்பினா, வந்த வழியையும் காணோம். எனக்கு அழுகை அழுகையா வந்தது. பேசாம அப்பவே வீட்டுக்கு போயிருந்தா, இப்போ பஜ்ஜி சாப்பிட்டுட்டே டிவி பார்த்திருக்கலாம்னு தோணுச்சு.

என்ன செய்யனு தெரியாம நான் முழிச்சிட்டிருந்த சமயம், ஒரு சுண்டெலி என் கால் பக்கத்துல ஓடிச்சு. "அம்மா"னு ஒரு காட்டு கத்தலோடு நான் சைக்கிளை கிழே போட்டுட்டு குதிச்சேன். அந்த சுண்டெலி கருப்பு பேண்டும், நீல கலர் குர்தாவும் போட்டிருந்தது. "பயமுரித்திட்டேனா? மன்னிச்சிக்கோங்க. நான் பயங்கர அவசரத்துல இருக்கேன்,"னு சொல்லுச்சு.

ஒரு நிமிஷம் கண் கொட்டாம அந்த சுண்டெலியை பார்த்தேன்.
"ஐய்! நீங்க பேசுவீங்களா?"னு கேட்டேன். சுண்டெலி என்னை விசித்தரமா ஒரு லுக் விட்டது.
"ஆமாம். ஏன்? உங்க ஊர்ல யாரும் பேசிக்க மாட்டீங்களா?" என்று கேட்டுச்சு.
"ஓ பேசுவோமே! ஆனா மிருகங்க கிட்ட பேச மாட்டோம்"
"சரி சரி. என் பேரு மேரி. இன்னைக்கு ராமு கல்யாணம், அதுக்கு தான் இவ்ளோ அவசரமா ஓடிட்டு இருக்கேன். அப்புறம் பேசலாம், சரியா?"
னு சொல்லிட்டு விருவிருனு நடக்க ஆரம்பிச்சது. கொஞ்ச தூரம் போனதும், திரும்பி என்னை பார்த்து,
"பேசாம நீயும் வாயேன். ராமு வீட்டு கல்யாண சாப்பாடு எட்டு காட்டுக்கு மணக்கும். நானும் சைக்கிள்ள போய் இறங்கினா சும்மா கெத்தா இருக்கும்,"னு சொல்லிச்சு.

"சரி. ஏறுங்க. என் பேரு கீர்த்தனா. எப்படி போணும்னு வழி சொல்லுங்க"னு சொன்னேன். லிஃப்டு கிடைச்ச சந்தோஷத்துல மேரி, பாடிக்கிட்டே வந்தா. கொஞ்ச தூரம் போனதும், பின்னால யாரோ வேகமா ஓடி வர சத்தம் கேட்டது.
"நிறுத்துங்க!நிறுத்துங்க!"னு யாரோ எங்களை கூப்பிட்டாங்க. திரும்பி பார்த்தா, ஒரு முயல், வேஷ்டியை ஒரு கையிலயும், துண்டை இன்னொரு கையிலயும் புடிச்சிட்டு மூச்சிரைக்க ஓடி வந்தது.
"என்ன ஐயரே! நீங்களும் லேட்டா?"னு நக்கலா மேரி விசாரிச்சா.
"கிண்டல் பண்ண நேரமில்லை. எனக்கும் கொஞ்சம் லிஃப்டு கிடைக்குமா?"னு சீனிவாசன் என்ற அந்த முயல் கேட்டுச்சு.

மேரி என்னோட சைக்கிள் முன்னாடி இருந்த கூடைக்கு இடம் மாற, சீனிவாசன் பின் சீட்டில் உட்கார்ந்தார். எங்கள் பயணம் மேரியோட பாட்டோடு தொடங்கியது.
"இன்னும் எவ்வளவு தூரம் போகணும் மேரி?"
"பக்கத்துல வந்துட்டோம். கவலை படாதே. அதோ அந்த குளத்தை தாண்டினதும், கல்யாண வீடு தான்," என்றாள்.
"இல்லை, வீட்டில தேடுவாங்க, அதான் கேட்டேன்."
"ஒன்னும் பயப்படாதே."னு அமைதிப்படுத்தினாள்.

அந்த குளத்தை நெருங்கும் போது தான் அவர்களை பார்த்தேன். ரெண்டு தவக்களை ஒரு ஆமை மீது உட்கார்ந்து வந்து கொண்டிருந்தன. கூடவே ஒரு நண்டும்,ஒரு வாத்தும் கையில் ஆளுக்கொரு பையுடன் நடந்து வந்தன. எல்லோரும் பட்டு ஜிப்பா, பட்டு வேஷ்டியில் ஜொலித்தனர்.
"அட! நம்ம கச்சேரி கோஷ்டி. கீர்த்தனா, இது தான் கணேஷ், வஸ்ந்த்; இந்த ஜில்லாவிலேயே மிகப் பெரிய பாடகர்கள்,"னு அறிமுகப்படுத்தினாள்.

ரெண்டு தவக்களையும், அவங்களோட பச்சை பட்டு ஜிப்பா காலரை தூக்கி விட்டு கொண்டனர்.
"அப்புறம் நம்ம சாமி(ஆமை) தான் தம்புரா, விட்டல்(நண்டு) மிருதங்கம், ராகவன்(வாத்து) நாதஸ். வாங்க,வாங்க நாமளும் வண்டியிலேயே போயிரலாம்"னு என்னமோ அம்பாஸிடர் கார்ல ஏத்திர மாதிரி எல்லோரையும் ஏத்தினா.

எனக்கு கை லேசா நடுங்க அரம்பிச்சுது. ரெண்டு நிமிஷம் நல்லா மூச்சு இழுத்து விட்டிட்டு, நானும் சைக்கிளை அழுத்த அரம்பித்தேன். தூரத்துல பயங்கர உருமல் சத்தம் கேட்டுச்சு.
"தலைவர் வந்துட்டார் போல"னு ராகவன் சொன்னான். அப்பாடா, இன்னும் கொஞ்ச தூரம் தான், எப்படியாவது தம் பிடிச்சு அழுத்த வேண்டியதுதான் என்ற முடிவோடு நானும் அவங்க பாட்டுல கலந்துக்கிட்டேன்.

திடீர்னு காடே அதிர்ந்தது. நில நடுக்கமோனு பயந்து நான் சைக்கிளை நிறுத்தினேன். புழுதி பறக்க ஒரு காட்டு யானை எங்களை நோக்கி ஓடி வந்தது. எங்களை பார்த்ததும் ஒரு நிம்மதி பெருமூச்சோடு நின்றது. எல்லோரும் வாயடைச்சு அந்த யானையை பார்க்க, கொஞ்ச நேரம் அங்கே ஒரு நிசப்தம் நிலவியது.

அப்புறம் ஏதோ ஜோக் சொன்ன மாதிரி எல்லோரும் சிரிக்க ஆரம்பிச்சாங்க. மேரி தான் சிரிப்பை அடக்கி, அந்த யானையை பார்த்து கேட்டாள்,
"அடப்பாவி, உன்னோட கல்யாணதுக்குமாடா லேட்டா வருவ?" மாப்பிள்ளை ராமு வெட்கப்பட்டு சிரிக்க, அங்கே திரும்பவும் சிரிப்பு சத்தம் கேட்டது.
"சரி சரி, சிரிச்சது போதும். கீர்த்தனா, நீ நிறையவே உதவி செஞ்சிருக்க, அப்படியே ராமுவுக்கும் லிஃப்டு கொடுக்க முடியுமா?"னு சீனிவாசன் கெஞ்சினார்.

எல்லோரது கவனமும் என் மேல, எனக்கோ என் கண் முன்னாடி எங்கப்பா பெருசா தெரிஞ்சாங்க. தாத்தா சொன்ன மாதிரி, பிள்ளையார் மேல பாரத்தைப் போட்டு தலையாட்டினேன். ராமு என்னை கட்டிப் பிடித்து தன் நன்றியை சொன்னான். யார் எங்கே உட்கார வேண்டும்னு ஒரு சின்ன அலோசனை நடந்தது. அதன்படி, ராமு பின் சீட்டில் அமர, அவன் முதுகில் சீனிவாசன் உட்கார, சீனிவாசன் முதுகில் மேரி உட்கார்ந்தாள். கச்சேரி கோஷ்டி முன் கூடையில் உட்கார்ந்தாங்க.

நான் கண்ணை மூடி ஏறி உட்கார்ந்து அழுத்தினேன். கல்யாண வீடு நெருங்க நெருங்க, சைக்கிள் ரொம்பவே மெதுவா நகர்ந்தது. வீட்டு வாசல் வரவும், பின் டயர் வெடிக்கவும் சரியா இருந்தது. அப்புறம் எப்படியோ சமாளிச்சு, ராமு, சீதா கல்யாணம் நல்ல படியா நடந்தது.

"அப்படி தான்பா இந்த சைக்கிள் உடைஞ்சுது. பாவம் பா ராமு, அவன் லிஃப்டு கேட்கும் போது நான் எப்படி மாட்டேன்னு சொல்ல முடியும், சொல்லுங்க?" என்று அப்பாவியாய் கேட்ட தன் செல்ல மகளை பாராட்டுவதா, இல்லை கடிந்து கொள்வதா என்று தெரியாமல் தன் மனைவியை பார்த்தார் முத்து.



****

Tuesday, June 20, 2006

தூங்கா விழிகள், தொண தொணக்கும் நினைவுகள்

சஞ்சலமில்லா தனிமை கேட்டேன்.
என்னை கட்டி அணைத்து
அருகில் அமர்ந்தாய்.

தூக்கமில்லா கனவுகள் கேட்டேன்.
என்னை தவிக்க விட்டு
எங்கே சென்றாய்?

வழிகாட்டி

மொழி மறந்து
கண்கள் அயர்ந்து
காற்றில் ஆடும் பிம்பமாய்
துருப்பிடித்து நான் ஆட
என்னிடம் ஏன் தேடுகிறாய்
போகாத ஊருக்கு வழி?

ராட்டினம்

வனிதாவும், கவிதாவும்
மெல்ல மறைய;
கமலின் கைதட்டலில்
பாபுனியும் சிரிக்க;
விரல் இடுக்கின்
சிறு ஓட்டையில்,
அப்பாவின் தலை
தூரத்து புள்ளியாக;
காற்றை கிழித்து
உயரே பறந்தோம்,
வானத்தை தொட.

நாளை பிடிப்போம்
என ஏமாற்றி
கீழே இழுத்தாள்
ஆசை அம்மா.

அழுக்கு லுங்கியும்,
முறுக்கேரிய கைகளும்,
கறைப்படிந்த சட்டைப்பையில்
கிழிந்த நோட்டுக்களுடன்
காணாமல் போனான்
அந்த வித்தைக்காரன்.

உங்கள் தெருவில்
அவனை பார்த்தால்,
என் வீட்டுக்கு
மறக்காமல் அனுப்புங்கள்.
ஆசையொடு காத்திருக்கிறேன்
வானத்தின் மேல்
தீரா காதலுடன்.

-- இந்த படத்தை பார்த்ததும் எழுதியது.

அப்போ எனக்கு நாலு வயசு. திருநெல்வேலியில் ஆச்சியிடம் வளர்ந்திட்டு இருந்த என்னை வலுக்கட்டாயம மெட்ராஸ் கூட்டிட்டு வந்து ரெண்டு வருஷம் ஓடிருச்சு. என்னை பார்த்துக்க என்னோட சித்தியும் வந்தாங்க. ஊர விட்டு வந்ததுல இருந்து நான் பண்ண அழிச்சாட்டியம் ரெம்பவே டூ மச்!

அன்னிக்கு அப்படி தான், தெருவுக்கு வந்த ராட்டினத்துல ஏறனும்னு ஒரே அடம். அப்பாவும், சித்தியும் ஏத்தி விட்டாங்க. ரெண்டாவது நிமிஷம் பயங்கர அழுகை, "என்னை இறக்கி விடு"னு. எங்க அப்பாவுக்கு நான் பண்ண கூத்துல என்னைக்கும் வராத கோபம் அன்னிக்கு வந்துச்சு. ராட்டினமும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்னு வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டங்க. நாம தான் விடா கொண்டன் பரம்பரை ஆச்சே, வீட்டுல உள்ள எல்லத்தையும் போட்டு உடைக்க ஆரம்பிச்சேன்.

இந்த கூத்து நடக்கவும், அம்மா Officeல இருந்து வரவும் சரியா இருந்தது. அப்புறம், அம்மா சமாதானப்படுத்தி ஒரு வழியா நானும் அந்த ராட்டினத்துல ரெண்டு தடவை சுத்திட்டேன். கமல், பாப்புனி ரெண்டு பேரும் பக்கத்து வீட்டுல இருந்தாங்க.வனிதா, கவிதா எதிர் வீடு.இது நடந்தது முத்தையால் செட்டி தெரு, புரசைவாக்கம்.

மனதோடு ஒரு மழை காலம்

விடிந்தும் விடியாத
அந்த மஞ்சள் ஒளியில்,
விழிப்புக்கும் துயிலுக்கும்
இடையில் உள்ள அரைமயக்கத்தில்,
வருடிடும் உன் ஒற்றை நினைவு -
மனதோடு ஒரு மழை காலம்!




-- இந்த கவிதை எழுதியது, ஷாம் நடித்து வெளிவரும் பட டைட்டில் (மனதோடு மழை காலம்) கேட்டவுடன்.

முதல் மரியாதை

நான் முதன் முதலில் தமிழில் எழுத ஆரம்பித்தது என் மூணாவது வயதில். நாங்க இருந்த வீட்டில், எங்களை போல் இன்னும் 6 ஒன்டி குடுத்தனங்கள். கீழ் வீட்டில் உள்ள வித்யா பெரியம்மா வாங்கும் தினத்தந்தி பேப்பரில் எனக்கு தெரிஞ்ச "ஏய்ஃஅகபே" கிருக்கி, அதுக்கும் ஒரு அர்த்தம் கற்பிச்சு பெரிய மனுஷி மாதிரி எல்லாரையும் ஒரு பெருமிதப் பார்வை பார்த்தது இன்னும் நினைவிருக்கிறது.

கிறிஸ்த்துவ பள்ளியில் படிச்சதுனாலயோ என்னவோ யோசிப்பதுகூட ஆங்கிலத்தில் தான். ஏதோ அந்த தாமிரபரணி கரையோரம் பிறந்த புண்ணியம், 24 வருஷம் மெட்ராஸ்ல குப்ப கொட்டியும் நல்ல தமிழ் மறக்கல.

பள்ளி படிப்பு முடிஞ்சு,10 வருஷம் கழிச்சு திரும்பவும் தமிழில் எழுத ஆரம்பிக்கறேன்.

எத்தனை குரைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவன் நீ குரு பொருப்பது உன் கடன்

என்று எல்லாம் வல்ல அந்த முருகன் மேல் பாரத்தை போட்டிட்டு ஆரம்பிக்கறேன்.